காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

காவல்துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி  காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மௌரியா தாக்கல் செய்த மனுவில், பிரகாஷ் சிங் என்பவரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் போலீஸ் சித்ரவதை, காவல் நிலைய மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவின்படி காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க மாநில அளவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும் மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான  புகார் ஆணையமும் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் காவல்துறை சீர்த்திருத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

ஆனால், மாநில அளவிலான புகார் ஆனையத்துக்கு உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான புகார் ஆணையத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த காவல்துறை சீர்த்திருத்த அவசரச் சட்ட விதிகளை சட்டவிரோதமானது என அறிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது  மனுதாரர் தரப்பில்,  தமிழகத்தில் சாத்தான்குளம் சம்பவம்போல் மேலும் நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களில்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என  வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com