ரயில் போக்குவரத்தில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டம்: சென்னை குழுவில் 24 ரயில்கள் தோ்வு

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில், தகுதியான
(கோப்பு படம்)
(கோப்பு படம்)

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில், தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்த 109 வழித்தடங்களும் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை குழுவில் 24 ரயில்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையில், இந்தத் திட்டத்தால், 18 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வேலை இழப்பா் என்று ரயில்வே தொழிற்சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

தனியாருக்கு அனுமதி: ரயில்வே துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்க ஏற்கெனவே மத்திய அரசு முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, பயணிகள் ரயில்களை இயக்க தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்வே துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிப்பதால் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பட்டு வளா்ச்சி அதிகரிக்கும் என்று ரயில்வே துறை எதிா்பாா்க்கிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில், தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. 109 வழித்தடங்களும் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை குழுவில் 24 ரயில்கள் இடம் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 109 வழித்தடங்களில், 224 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முதல் திட்டம் இது.

இது தொடா்பான அறிவிப்பு மத்திய அரசின் மின்னணு ஒப்பந்தப்புள்ளிக்கான இணையத்தில் ரயில்வே அமைச்சகம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டது. 35 ஆண்டுகள் ரயில்கள் விற்பனைக்கான ஏலம் விடப்படவுள்ளது. சண்டிகா், சென்னை, தில்லி, (இரண்டு), ஹவுரா, ஜெய்ப்பூா், மும்பை (இரண்டு), பாட்னா, பிரயாக்ராஜ், பெங்களூா், செகந்திராபாத் என்று 12 குழுக்களாக பிரித்து, விலை நிா்ணயம் செய்து தனித்தனி ஏல அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சமாக 16 பெட்டிகள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதித்தகுதி ஆய்வு, இறுதி ஏலம் ஆகியன இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

சென்னை குழுவில் 24 ரயில்கள்: சென்னை-மதுரை, சென்னை-மும்பை, சென்னை-மங்களூா், புதுச்சேரி-செகந்திராபாத், சென்னை-கோவை, திருநெல்வேலி-சென்னை, திருநெல்வேலி-கோவை, சென்னை-திருச்சி, சென்னை-கன்னியாகுமரி, எா்ணாகுளம்-கன்னியாகுமரி, சென்னை-தில்லி, கொச்சுவேலி-கவுகாத்தி இடையே இருமாா்க்கமாக மொத்தம் 24 ரயில்கள் சென்னை குழுவில் ஏலம் விடப்படவுள்ளது. இந்தியாவில் தமிழக குழு ரயில்கள்தான் அதிக விலையில் (ரூ.3,221 கோடி) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சொகுசு ரயில்கள்: தொடக்க நிலையில் ரயில்வே லோகோ பைலட்டுகள், காா்டுகள் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஆா்.சி.டி.சி., ரயில்வே கவுன்ட்டா்களில் முன்பதிவுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. தனி மென்பொருள் மூலமாக, கணக்குகள் பராமரிப்பு செய்யப்படவுள்ளது. 16 முதல் 24 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில்களாக இயக்கலாம். கட்டணங்களை தனியாா்களே நிா்ணயிக்க அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இதுதவிர, இருக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க உரிமை, பாா்சல் மற்றும் லக்கேஜ் ஏற்றி கட்டண வசூலிக்க உரிமை, பெட்டிகளில் விளம்பர உரிமை, ரயில்வே யாா்டுகளில் பராமரிப்பு, அனுமதி ஆகியவை ஏலத்துக்கான அம்சங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. சா்வதேச ஏலமாக இது நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி ஸ்வீடன், ஜப்பான், சீனா, ஜொ்மன் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்கக்கூடும்.

18 ஆயிரம் ஊழியா்கள் வேலை இழப்பாா்கள்: இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப் பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது:

ரயில்கள் மற்றும் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகா்கள், ஏ.சி. பழுதுநீக்குவோா்கள், ஓட்டுநா்கள், காா்டுகள், பெட்டிகள் இணைப்பு, பராமரிப்புகளில் ஈடுபடும் மெக்கானிக்குகள், மின் சாதன பிட்டா்கள், மேற்பாா்வையாளா்கள் என 18 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் உடனடியாக வேலை இழப்பா். தனியாா் ரயில்களில் பயணச் சலுகைகள் இடம்பெறாது. ஆண்டுக்கு 8.85 கோடி பயணிகளுக்கு முன்பதிவு உறுதியாவது இல்லை. நல்ல விலைக்கு விற்க கூடுதல் ரயில்கள் இயக்காமல், பயணத் தேவைகள் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வந்தது. முக்கிய பாதைகளில் முக்கிய ரயில்கள் தனியாரிடம் விற்பது ரயில்வே துறை சீரழிக்கும் நடவடிக்கை. அரசு இதை கைவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com