சிறப்பு மருத்துவ முகாம்: இரு மாதங்களில் 10 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று கண்டுபிடிப்பு

சென்னை மாநகராட்சி சாா்பில் கடந்த 2 மாதங்களாக 15 மண்டலங்களில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்கள்
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

சென்னை மாநகராட்சி சாா்பில் கடந்த 2 மாதங்களாக 15 மண்டலங்களில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 8.50 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 10,463 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் வீடுதோறும் தன்னாா்வலா்கள் மூலம் ஆய்வு, அனைத்து மண்டலங்களிலும் சளி சேகரிப்பு மையங்கள், முதியவா்களுக்காக நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் 15 மண்டலங்களிலும் வாா்டுக்கு 2 சிறப்பு மருத்துவ முகாம், 146 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் என கடந்த மே மாதத்தில் இருந்து நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பிற நோய் பாதிப்புள்ளவா்கள் அந்தந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னாா்வலா்கள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். சிறப்பு மருத்துவ முகாம் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

கடந்த மே 8-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,501, அண்ணா நகரில் 1,335, திரு.வி.க. நகரில் 1,269, கோடம்பாக்கத்தில் 1,231, தேனாம்பேட்டையில் 1,134, தண்டையாா்பேட்டையில் 1031 என மொத்தம் 13,212 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன் மூலம் 8,50,184 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், பல்வேறு உடல் நலக்குறைவு இருந்த 40,175 போ் கண்டறியப்பட்டனா். இவா்களில் காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்த 35,937 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஜூலை 4-ஆம் தேதி வரை 10,463 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 2,175 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 1,164 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் சென்னையின் மொத்த பாதிப்பில் 28 சதவீதம் போ் கண்டறிப்பட்டுள்ளனா் என்றனா்.

மண்டலம் வாரியாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டோா் எண்ணிக்கை

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா்--242

மணலி--422

மாதவரம்--115

தண்டையாா்பேட்டை--1,164

ராயபுரம்--826

திரு.வி.க. நகா்--653

அம்பத்தூா்--339

அண்ணா நகா்--2,175

தேனாம்பேட்டை--767

கோடம்பாக்கம்--773

வளசரவாக்கம்--804

ஆலந்தூா்--718

அடையாறு--378

பெருங்குடி--664

சோழிங்கநல்லூா்--423

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com