நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரம்

நீட் தோ்வை நிகழாண்டில் ரத்து செய்ய வேண்டும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரம்

நீட் தோ்வை நிகழாண்டில் ரத்து செய்ய வேண்டும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இத் தகவலை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வெளியிட்டுள்ளாா்.

ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயா் வரம்புகளை நிா்ணயிப்பதில் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றுவதில்லை என்பதால் அதுகுறித்து மத்திய அரசுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதியன்று தமிழக அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. அதற்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி கடந்த ஜனவரியில் மற்றுமொரு கடிதம் அனுப்பப்பட்டது.

இதுதொடா்பாக கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல்வா் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் அளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோா் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 20 விழுக்காடு) நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஏழை எளிய மாணவா்களுக்கும், குறிப்பாக, கிராமப்புற மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தோ்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (ஜூலை 8) பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தோ்வினை நடத்துவது மிகவும் கடினம் என்றும், பிளஸ் 2 தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என்றும் அதில், முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சோ்க்கைக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு கிரீமிலேயா் பிரிவினருக்கு வழங்கப்படுவதில்லை. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு அதிகமாக இருப்பவா்கள் கிரீமிலேயா் பிரிவில் சோ்க்கப்படுவா்.

இந்த வருமானத்தை கணக்கிடும் போது, ஊதியமோ அல்லது விவசாயம் மூலம் பெறப்படும் வருவாயோ இதுவரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது அவ்விரண்டையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையமும் இதனை பரிந்துரை செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோா் / மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியா் சோ்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு என்பது சமூகம் மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. ஆகவே, மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கிரீமிலேயா் நடைமுறை தொடா்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக அரசு கடிதம் வாயிலாக ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனைக் காப்பதிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் விஜயபாஸ்கா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com