நன்கொடை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: இணை ஆணையர் எச்சரிக்கை

பக்தர்களிடம் கோயில் ஊழியர்கள் நன்கொடை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
பழனி முருகன் கோவிலில்  கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்

பழனி முருகன் கோவிலில் பக்தர்களிடம் கோயில் ஊழியர்கள் நன்கொடை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பழனி முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல முடியாத நிலையில் திருப்பணிகளை அவசர அவசரமாகச் செய்வதாகவும், திருப்பணியில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆன்மீகவாதிகள் சந்தேகம் எழுப்பினர். 

அதனைத்தொடர்ந்து பழனி கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரா பானு ரெட்டி ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களை மலைமீது அழைத்துச்சென்று கும்பாபிஷேக திருப் பணிகளைக் காண்பித்து விளக்கமளித்தார். தற்போது மலைமீதுள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட எட்டு கோபுரங்களில் சிதிலமடைந்த சாமி சிலைகள் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், முதல் கட்டமாக 6.47 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படியே பணியாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வேலை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

நவபாசான சிலை அமைந்துள்ள கருவறையில் எந்த திருப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிக்காகப்  பக்தர்கள் யாரிடமும் நன்கொடை வசூலிக்கப்படுவதில்லை, கோயில் ஊழியர்கள் மற்றும் பிறர் யாராவது நன்கொடை கேட்டு தொந்தரவு செய்தால் உடனடியாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். 

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி பெயரைக் கூறி நன்கொடை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ள இணை ஆணையர் முறையாக கோயில் நிர்வாகம் சார்பில் நன்கொடை வசூலிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலமாக வங்கிகளில் செலுத்தும் படியாக மட்டுமே நன்கொடை வசூலிக்கத் திட்டம் உள்ளது அது முறையாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகத்தை மேற்பார்வையிட திருப்பணி குழு அமைக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்துப் பதிலளித்த இணை ஆணையர் அறநிலையத்துறையும் தமிழக அரசும் முடிவெடுக்க வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com