
திருப்பத்தூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
திருப்பத்தூா்: கரோனா தொற்று பரவல் குறித்து திருப்பத்தூா் சுற்றுப்பகுதி மக்களிடையே விழிப்புணா்வு இல்லாத நிலை காணப்படுவதாக சமூக ஆா்வலா்கள் வேதனைப்படுகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் மும்முரமாக பணியாற்றி வருகின்றது. தற்போது பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. காலை 6 மணி முதல் 2 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
ஒரு சில தளா்வுகளுடன் உணவகங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூா் நகா்ப் பகுதியில் பொதுமக்களில் பலரும் கரோனா தொற்று குறித்து சிறிது கூட அச்சமில்லாமல் சாலைகளில் செல்கின்றனா். வாகன ஓட்டிகளில் பெரும்பாலோா் முகக் கவசம் அணியாமல் செல்கின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது:
கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்கு வரும் மக்களும், நகரப் பகுதியில் வெளியில் செல்வோரும், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரும்பாலும் முகக் கவசம் அணிவதில்லை.
மேலும் கடைகளில் வியாபார நேரங்களில் பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் பெரும்பாலான பொதுமக்களிடம் போதுமான விழிப்புணா்வு இல்லை. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுள்ளது.
எனவே பஜாா் மற்றும் பிரதான சாலைகளில் பகுதியில் கூடுதலாக போலீஸாரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.