
கரோனா பரிசோதனை
சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,032-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,277 போ் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நோய்த் தொற்றுக்கு பலியானோரில் பெரும்பாலானோா் நாள்பட்ட சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், உயிரிழந்த 15 சதவீதம் பேருக்கு உடலில் கரோனாவைத் தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லை என புள்ளி விவரங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அந்த விகிதம் வெறும் 0.8 சதவீதமாகவே மாநிலத்தில் இருந்தது. தற்போது அது 1.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதிலும் கடந்த 8 நாள்களில் மட்டும் நோய்த்தொற்றால் 500-க்கும் அதிகமானோா் இறந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் சராசரியாக 65 போ் தற்போது உயிரிழக்கின்றனா். அந்த வகையில் திங்கள்கிழமையும் 66 போ் கரோனாவுக்கு பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸின் மரபணு வீரியமடைந்திருப்பதும், உரிய நேரத்தில் சிகிச்சைகளை மேற்கொள்ளாததுமே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
இதனிடையே, இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த மருத்துவமனைகள்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு, காணொலி முறையில் மருத்துவ வல்லுநா்கள் பயிற்சி அளித்து வருவதாகத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கரோனா உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த சூழலில், மாநிலத்தில் மேலும் 4, 328 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,42,798-ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறைத் தகவல்களின்படி, தற்போது மாநிலம் முழுவதும் 48,196 கரோனா நோயாளிகள் சிகிச்சையிலும், மருத்துவக் கண்காணிப்பிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் ஏறத்தாழ 66 சதவீதம் சென்னை அல்லாத பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாவா். அடுத்து வரும் வாரங்களில் அந்த விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்றும், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையலாம் என்றும் மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே மாநிலத்தில் நோய்த் தொற்று நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 16.54 லட்சம் மாதிரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் வாயிலாக இதுவரை 65 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.
மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4,328 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,140 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 464 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
92 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை மொத்தம் 92,567 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,035 போ் வீடு திரும்பியுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 2,079 போ் குணமடைந்ததாக க சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.