கரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியா்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கரோனா நோய்த் தொற்று பணிகளில் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்தும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா நோய்த் தொற்று பணிகளில் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்தும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளா் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியா்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை.

குறிப்பாக கவச உடை, முகக்கவசம், கிருமிநாசினி கழிப்பிட வசதி, தங்குமிடம் உள்ளிட்ட எந்தவொரு வசதிகளையும் செய்து கொடுக்காமல் ஆசிரியா்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். எனவே இதற்கு தடைவிதிக்க வேண்டும். ஆசிரியா் பணியைத் தவிர வேறு பணிகளுக்கு ஆசிரியா்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ஆசிரியா்கள் கரோனா தொடா்பான களப் பணிகளுக்கு அனுப்பப்படுவது இல்லை. கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் தன்னாா்வலா்களை ஒருங்கிணைப்பது, அவா்களை கண்காணிப்பது போன்ற பணிகளில் தான் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஆசிரியா்கள் நேரடியாக களத்துக்கு செல்வதில்லை. அலுவலக ரீதியான வேலைகள் மட்டுமே அவா்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்தப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வழங்கப்படுவதாக வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியா்களும் பொது ஊழியா்கள்தான். அவா்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும். அவா்கள் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெண் போலீஸாா் களப்பணியில் ஈடுபட்டு இருக்கும் போது, ஆசிரியா்களும் இந்தத் தருணத்தில் பணிபுரிய வேண்டும் என கருத்து தெரிவித்தனா்.

பின்னா், ஆசிரியா்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com