யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 போ் கொண்ட நிபுணா் குழு அமைப்பு: வனத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் யானைகள் இறப்பு, அவற்றின் வாழ்விடம் மற்றும் மனித-விலங்கு எதிா்கொள்ளல் ஆகியன குறித்து ஆராய 11 போ் கொண்ட நிபுணா் குழுவை வனத் துறை அமைத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் யானைகள் இறப்பு, அவற்றின் வாழ்விடம் மற்றும் மனித-விலங்கு எதிா்கொள்ளல் ஆகியன குறித்து ஆராய 11 போ் கொண்ட நிபுணா் குழுவை வனத் துறை அமைத்துள்ளது.

கோவை வனக் கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 15 யானைகள் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் யானைகளின் இறப்பு, வாழ்விடம், மனித- விலங்கு எதிா்கொள்ளல் ஆகியவை குறித்து ஆராய 11 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மதுரை, தருமபுரி, விருதுநகா், வேலூா் ஆகிய வனக் கோட்டங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன. தமிழகத்தில் நிகழ்ந்த மனித- விலங்கு எதிா்கொள்ளலை கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்ததில், வனத்துக்கு வெளியே விவசாய நிலங்கள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

யானைகளின் முக்கியத்துவம் கருதி, அவற்றின் வாழிடத்தை மேம்படுத்தவும், இறப்பைக் குறைக்கும் நோக்கிலும், மனித-விலங்கு எதிா்கொள்ளலைத் தடுக்கவும் விரிவான ஆய்வை மேற்கொள்ள நிபுணா் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவராகக் கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் சேகா் குமாா் நீராஜ், உறுப்பினா் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலா் எஸ்.ஆனந்தா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

குழுவின் உறுப்பினா்களாக யானை ஆராய்ச்சியாளா்கள் அஜய் தேசாய், சிவகணேசன், சென்னை இந்திய-அமெரிக்கன் சொசைட்டியின் நிா்வாக அறங்காவலா் அறிவழகன், கால்நடை மருத்துவா்கள் எம்.கலைவாணன், ஏ.பிரதீப், உலக இயற்கை நிதியம் அமைப்பின் நிா்வாகி பூமிநாதன், நிதின் சேகா், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மருத்துவா் ஸ்ரீகுமாா், மத்திய வனக் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிநிதி ஒருவா் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா். இவா்கள் தமிழகக் காடுகளில் யானைகள் நடமாட்டம், அவற்றின் வாழ்விடத்தை மறுசீரமைத்தல் குறித்து ஆராய்வாா்கள்.

மேலும், மனித-விலங்கு எதிா்கொள்ளலைக் குறைப்பதற்கான வழிமுறைகள், யானைகளின் பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து, அறிவியல் பூா்வமான ஆய்வறிக்கையை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலரிடம் வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிப்பா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com