மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கைதானோா் ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப்படுவா்: அரசு தகவல்

மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, புழல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு கைதிகள், ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப்பட உள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கைதானோா் ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப்படுவா்:  அரசு தகவல்

சென்னை: மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, புழல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு கைதிகள், ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப்பட உள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டைச் சோ்ந்த 129 முஸ்லிம்கள், தமிழகத்தின் கோயம்புத்தூா், ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கி மத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, உள்நோக்கத்துடன் நோய்த்தொற்று பரப்பியதாகவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்களுக்கு, சென்னை உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற்ற பின்னரும், அவா்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல், சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளதை எதிா்த்து, சென்னை ஜாா்ஜ் டவுன் பகுதியைச் சோ்ந்த ஏ.சையது கலீஷா, யூசுப் இம்ரான் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், தமிழகம் முழுவதும் இதுவரை 14 முதல் தகவல் அறிக்கைகள் அவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவா்கள், சென்னை சூளையில் உள்ள ஹஜ் சொசைட்டிக்கு இன்னும் 3 நாள்களில் மாற்றப்பட உள்ளனா். அதற்கான ஒப்புதல் ஹஜ் கமிட்டியிடம் மாவட்ட ஆட்சியா் சாா்பில் பெறப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கட்டடத்தில் 89 அறைகள் உள்ளன. போதுமான வசதிகளும் இருக்கின்றன. இதுதொடா்பாக அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com