
சென்னை: காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 90 மி.மீ., கேளம்பாக்கத்தில் 80 மி.மீ., சென்னை விமான நிலையத்தில் 70 மி.மீ., மாமல்லபுரத்தில் 60 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 50 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூா், தாம்பரம், திருவள்ளூா் மாவட்டம் பூண்டியில் தலா 40 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: கா்நாடகம், கேரள கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 15,16 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு ஜூலை 17-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.