
பாரசிட்டமால் வழங்கத் தடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு
மதுரை: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்துகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் அளித்துள்ளது.
மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரையை வழங்க உத்தரவிடக் கோரி ஜோயல் சுகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாரசிடமால் மாத்திரை வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதே சமயம், மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தது.
தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி பாரசிட்டமால் மாத்திரை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி ஜோயல் சுகுமார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.