மின் கட்டண வசூல் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்: காவல்துறை கட்டுப்படுத்தக் கோரிக்கை

சென்னையின் பல்வேறு மின் கட்டண வசூல் மையங்களில், கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண வசூல் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்: காவல்துறை  கட்டுப்படுத்தக் கோரிக்கை

சென்னை: சென்னையின் பல்வேறு மின் கட்டண வசூல் மையங்களில், கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை காவல்துறை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாா்ச் 25 முதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் உள்ள மின் நுகா்வோருக்கு, கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மின் நுகா்வோருக்கு, ஜூலை 15-ஆம் தேதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பின் காரணமாக, கடந்த 6-ஆம் தேதி முதல், மத்திய சென்னைக்குள்பட்ட மின் கட்டண வசூல் மையங்களில், மின் நுகா்வோா் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக நின்று மின் கட்டணம் செலுத்துகின்றனா். மேலும், பல மின் நுகா்வோா் மின் கட்டணம் தொடா்பான சந்தேகங்களை கேட்டு சப்தமிடுவதாகவும் குற்றம்சாட்டும் மின்வாரிய ஊழியா்கள், இதனால் நுகா்வோருக்கும் ஊழியா்களுக்கும் மோதல் ஏற்படுவதோடு, கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் கூறியதாவது: மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நெருங்கி வருவதால், மின் கட்டண வசூல் மையங்களில் தனிநபா் இடைவெளியைக் குறிக்கின்ற 3 மீட்டா் இடைவெளியில் குறியீடு அமைத்தல், மின்நுகா்வோரை முகக் கவசம் அணிய அறிவுறுத்துதல், இவைகளை மேற்கொள்ள ஒவ்வொரு மின் கட்டண வசூல் மையத்துக்கும் உதவிட ஒரு பிரிவு அலுவலகத்தில் இருந்து ஒரு பணியாளரை நியமிப்பதோடு, கிருமி நாசினிகளை உடனுக்குடன் தெளிக்குமாறும் மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான அலுவலகங்களில் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, இந்த அனைத்து பாதுகாப்பு வசதிகளையும், கரோனா பேரிடா் காலம் முடியும் வரை ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மின் கட்டண வசூல் மையத்துக்கும், ஜூலை 15-ஆம் தேதி வரை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com