கடலூர்: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கிராமத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கருப்புக் கொடியுடன் தர்ணா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
மீனவர்கள் பேராட்டம்
மீனவர்கள் பேராட்டம்

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கிராமத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கருப்புக் கொடியுடன் தர்ணா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். சுருக்கு மடி வலை பயன்படுத்தத் தடை உள்ளதால் சக கிராம மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக இருதரப்பு மீனவர்களும் தனித்தனியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதைத் தடை செய்யக் கோரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 கிராம மீனவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கிராமத்திற்கு மீனவர்கள் படகுகள் மற்றும் வாகனங்களில் வந்தனர். பின்னர் படகுகளில் கறுப்புக் கொடி கட்டியும், கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தியும் சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மீனவர்கள் படகிலேயே கருப்புக் கொடி கட்டி கடலில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் 500 படகுகளில் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர் சங்க நிர்வாகிகள் பேசினர். 

பின்னர் 32 மீனவ கிராம நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 5 தீர்மானங்களை நிறைவேற்றினர். பின்னர் அவர்களிடம் கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ், சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் தீர்மான நகலும், மனுவும் கொடுக்கப்பட்டது.

அப்போது சுருக்கு வலைகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சில மீனவர்கள் கூறியதால் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மனுவை வாங்கிக் கொண்டு சென்றனர். இதனால் சுமார் நான்கு மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததால் மீனவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய  மீனவர் சங்க நிர்வாகி முருகன்,

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து இந்த கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி உள்ளோம். சுருக்குமடி வலைகளை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இதன் பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விரைவில் இன்னும் பெரிய அளவில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் எனக் கூறினார்.

மீனவர்கள் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஶ்ரீ அபிநவ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com