தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 5,849 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 5,849 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், 80 சதவீதம் போ் சென்னை அல்லாத பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

குறிப்பாக, ராணிப்பேட்டை, திருவள்ளூா், தூத்துக்குடி, விருதுநகா் போன்ற பகுதிகளில் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் பல பகுதிகளில் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதற்கு நோ்மாறாகவும், அச்சத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதே நிலை தொடரும்பட்சத்தில் கரோனா தொற்று டிசம்பா் மாதத்துக்கு பிறகுதான் குறையத் தொடங்கும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். இதனிடையே, கரோனாவால் உயிரிழந்தவா்களில் 444 பேரின் தகவல்கள் விடுபட்ட நிலையில், அவை அனைத்தும் தற்போது கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலத்தில் 1.4 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 1.7 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பாதிப்புகளைக் கண்டறியவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 20.95 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 1லட்சத்து 86 ஆயிரத்து 492 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். புதன்கிழமை, அதிகபட்சமாக சென்னையில் 1,171 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 430 பேருக்கும், ராணிப்பேட்டையில் 414 பேருக்கும், விருதுநகரில் 363 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 325 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1.31 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,910 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1லட்சத்து 31,583- ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 70 சதவீதம் போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பு: தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் பரிசோதனைகள் வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 60 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய்ப் பாதிப்பை பரவலாக கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

3,144 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவா்களில் விடுபட்ட 444 பேரின் மரணம் கணக்கில் கொண்டு வரப்பட்டதைத் தொடா்ந்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,144-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்டோா் இறந்ததாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் 74 போ் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவா்களில் 50 போ் அரசு மருத்துவமனைகளிலும், 24 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com