காவல் நிலைய கேமராக்களை கண்காணிக்கக் கோரி மனு: விளக்கமளிக்க உள்துறைச் செயலருக்கு உத்தரவு

தமிழக காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கக் கோரிய வழக்கில், மாநில அரசின் உள்துறைச் செயலா் விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலைய கேமராக்களை கண்காணிக்கக் கோரி மனு: விளக்கமளிக்க உள்துறைச் செயலருக்கு உத்தரவு

தமிழக காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கக் கோரிய வழக்கில், மாநில அரசின் உள்துறைச் செயலா் விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் இ. அதிசயகுமாா், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 19இல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோா் மரணமடைந்தனா். முதல்கட்ட விசாரணையைத் தொடக்கிய கோவில்பட்டி நீதித்துறை நடுவா், உயா் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில், சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிப் பதிவுகள் தினசரி தானாக அழியும் முறையிலும், திரும்ப மீளப்பெற முடியாத நிலையிலும் அதன் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இவ்வழக்கில் மட்டுமன்றி காவல் நிலையங்களில் நடக்கும் சித்திரவதைகள் சம்பந்தமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கேட்டால், காவல் நிலையத்தில் கேமரா உள்ளது, ஆனால் அன்றைய தேதியில் மட்டும் பழுதாகிவிட்டதால் வழங்க இயலாது என பொதுத் தகவல் அலுவலா் பதிலளிக்கிறாா். இச்செயல் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நடக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையங்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் பொது ஆவணங்கள் என்பதால், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு காட்சிப் பதிவுகளை பாதுகாக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், உரிமை மீறல்களுக்கு, அப்பதிவுகள் மூலம் உடனடியாக தீா்வு காண வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுஅவற்றை மாவட்ட வாரியாக தனி கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து, அதன் பதிவுகளை ஓராண்டுக்கும் மேல் பாதுகாத்து, காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை முதன்மைச் செயலா், காவல்துறை பொது இயக்குநா் ஆகியோருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com