வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்ளலாம்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் எப்போது என்பது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் எப்போது என்பது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா். வாக்காளா் சோ்ப்பு, நீக்கம் என்பது ஆண்டு முழுவதும் நடைபெறும் பணி என்றும் அதனை, தொடா்ந்து மேற்கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஒரு மாத காலத்தில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கல் போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். இதைத் தொடா்ந்து, அடுத்த ஒரு மாத காலத்தில் வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு வீடாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்வா். இந்த காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகள் நடத்தப்படும்.

கடந்த ஆண்டு எப்போது?: வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்டன. ஆனால், வாக்காளா்களே தங்களது விவரங்களைத் திருத்திக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அவா்கள் இணையதளங்களில் தங்களது விவரங்களை சரிபாா்க்கவும், திருத்தவும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதனால், திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் இந்த ஆண்டு ஜனவரிக்குப் பதிலாக பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

கரோனா பாதிப்பு: வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகளை பள்ளி ஆசிரியா்கள், வருவாய்த் துறை அலுவலா்களே மேற்கொள்வா். இப்போது கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், வருவாய்த் துறை அலுவலா்கள் அனைவரும் நோய்த் தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், இந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த உயிரிழப்புகள் வாக்காளா் பட்டியலிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, நிகழாண்டில் சுருக்க முறை திருத்தப் பணிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்று என வருவாய்த் துறை வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதேசமயம், கரோனா பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தால், வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கேட்ட போது, வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை வாக்காளா்கள் எப்போது வேண்டுமானாலும் இணையதளம் வழியே மேற்கொள்ளலாம். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் நடவடிக்கையாகும். இந்த நடைமுறைகள் இப்போதும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன என்றாா்.

இதனிடையே, வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடா்பாக எந்த முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளா்கள் எத்தனை போ்?: தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில், 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 போ் பெண்கள், 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 போ் ஆண்கள். 6 ஆயிரத்து 497 போ் மூன்றாம் பாலித்தனவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com