எதிர்க்கட்சியினர் முகக்கவசம் அணியாததால் பேரவையை நடத்த முடியவில்லை: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தான் பேரவையை நடத்த முடியாமல் போனது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தான் பேரவையை நடத்த முடியாமல் போனது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டம் சனிக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடைபெற்றது.

இது குறித்து தனது முகநூலில் காணொளி மூலம் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது.  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் கரோனா தொற்று ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  மத்திய அரசின் விதிமுறைபடி 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் 15,000 பேருக்கு கரோனா சோதனை செய்ய வேண்டும் .  ஆனால், புதுவையில் 14 லட்சம் மக்கள்தொகை இருக்கும் நிலையில்,  ஏற்கெனவே 35,000 பேருக்கு மேல் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களைவிட புதுவையில் இரு மடங்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  புதுச்சேரி இந்திரா காந்தி  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை எண்ணிக்கையை 400 இல் இருந்து 1,000 ஆகவும்,  ஜிப்மரில் 1000 இல் இருந்து கூடுதலாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் தலா 150 முதல் 300 பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  புதுவையிலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். எனவே, புதுவையில் சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் தேவைப்படுகிறது.  மாநில அரசு சார்பில் ஜிப்மர்,  அரசு மற்றும் தனியார்  மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சில ஹோட்டல்களில் கூட தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான உபகரணங்களை வாங்க தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது.  மாஹே,  காரைக்காலில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆந்திராவில் கரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அதன் எதிரொலியாக ஏனாம்  பிராந்தியத்திலும் பாதிப்பு உயர்ந்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கரோனா வந்ததால் பேரவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், மரத்தடியில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தான் பேரவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி கூட முகக்கவசம் அணியாமல் தான் பேரவைக்கு வந்தார்.  முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினேன். கரோனா பாதிப்புடன் பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளே விதிமுறைகளை கடைபிடிக்காததால் பல பிரச்சனைகள் வருகின்றன.  கடைகள்,  சந்தைகள்,  திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக புதுவைக்கு வருவோர்களால் கரோனா பரவுகிறது.

 கரோனாவுக்கு மருந்து இல்லை.  இப்போது தான் சோதனையில் இருந்து வருகிறது.  எனவே,  விதிமுறைகளை கடைபிடித்தால் தான் கரோனா பரவலை தடுக்க முடியும்.” என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com