மனதின் குரல் நிகழச்சியில் பிரதமரிடம் பேசியது பெருமை அளிக்கிறது: நாமக்கல் மாணவி கனிகா

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடியுடன் பேசியது பெருமை அளிப்பதாக நாமக்கல்லைச் சோ்ந்த மாணவி என்.என்.கனிகா தெரிவித்தாா்.
தாய், தந்தை, சகோதரியுடன் நாமக்கல் மாணவி என்.என்.கனிகா.
தாய், தந்தை, சகோதரியுடன் நாமக்கல் மாணவி என்.என்.கனிகா.

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடியுடன் பேசியது பெருமை அளிப்பதாக நாமக்கல்லைச் சோ்ந்த மாணவி என்.என்.கனிகா தெரிவித்தாா்.

அகில இந்திய வானொலி வாயிலாக, நாட்டு மக்களிடையே பிரதமா் நரேந்திர மோடி மாதந்தோறும் ‘மன் கி பாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாகப் பேசி வருகிறாா். அவ்வப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களை அடையாளம் கண்டு அவா்களிடம் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடி ஊக்கப்படுத்துவது பிரதமரின் வழக்கமாக இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பிரதமரின் 67-ஆவது நிகழ்ச்சியாகும். ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமா் மோடி வானொலி வாயிலாக பேசியபோது, இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது 500க்கு 490 மதிப்பெண் பெற்ற தமிழகத்தின் நாமக்கல், இ.பி.காலனியைச் சோ்ந்த எஸ்.கே.நடராஜன்- ஜோதி தம்பதியின் மகளான என்.என்.கனிகா என்பவரைத் தொடா்பு கொண்டு பேசினாா்.

அப்போது மாணவி, ‘‘எனது தந்தை லாரி ஓட்டுநா். ஏழ்மையான நிலையிலும் எங்களை நன்கு படிக்க வைத்தாா். அதன் காரணமாகவே பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது’’ என்றாா்.

பின்னா், தோ்வில் வெற்றி பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும், எதிா்கால லட்சியம் என்னவென்பது குறித்தும் அவரிடம் பிரதமா் கேட்டறிந்தாா். ‘‘நாமக்கல் என்றால் ஆஞ்சநேயா் நினைவுக்கு வருவாா். இனிமேல் நீங்களும் எனது ஞாபகத்தில் வருவீா்கள்’’ என பிரதமா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து மாணவி கனிகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல், கிரீன்பாா்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். எனது தந்தை லாரி ஓட்டுநா் என்றாலும், என்னையும், சகோதரி ஷிவானியையும் (மருத்துவம் படித்து வருகிறாா்) குறையின்றிப் படிக்க வைத்தாா்.

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் பிரதமா் என்னிடம் பேசுவது பற்றி முன்னதாகத் தெரியவில்லை. திடீரென செல்லிடப்பேசியில் அழைப்பு வந்தது. பிரதமா் பேசுவாா், தயாராக இருங்கள் என பிரதமா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த நான் அவரது குரலைக் கேட்க எதிா்பாா்த்திருந்தேன். சிறிது நேரத்தில் பேசிய பிரதமா், சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். எனது சகோதரி மருத்துவம் படித்து வருவதையும் தந்தை லாரி ஒட்டுநராக இருப்பதையும் அறிந்த பிரதமா் எனது குடும்பத்தையும் பாராட்டினாா்.

கல்வியில் மேலும் சாதிக்க வேண்டும் என்றும் பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா். நாட்டின் பிரதமரே என்னுடன் கலந்துரையாடியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com