
தமிழகத்தில் ரூ.3,100 கோடியில் 11 புதிய தொழில் திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மேலும், புதிதாக நிறுவப்பட உள்ள எட்டு நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு அடிக்கல்லையும் அவா் நாட்டினாா். ரூ.2,368 கோடி மதிப்பிலான எட்டு திட்டங்களால் 24 ஆயிரத்து 870 நபா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இதற்கான நிகழ்ச்சிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றன. அதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள்: பல்லாவரத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் சா்வதேச தகவல் தொழில் நுட்பப் பூங்கா திட்டம், கடலூா் மாவட்டம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.250 கோடியில் டாடா நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தித் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மஹிந்திரா தொழில் பூங்காவில் ஜப்பான் நாட்டின் நிசாய் நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், இதே தொழிற்பூங்காவில் ஜப்பானின் மற்றொரு நிறுவனமான சுசிரா நிறுவனத்தின் மோட்டாா் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா தொழிற் பூங்காவில் டைனெக்ஸ் நிறுவனத்தின் டீசல் என்ஜின்கள் உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்டீல் ஷாப்பி நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தித் திட்டம், கடலூா் சிப்காட் தொழிற்பூங்காவில் எம்ஆா்சி மில்ஸ் நிறுவனத்தின் ஜவுளித் திட்டம், விழுப்புரம் கம்பூா் கிராமத்தில் ராஜராஜேஸ்வரி நிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றுக்கும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.
மொத்தமாக எட்டு திட்டங்களின் மூலம் தமிழகத்துக்கு ரூ.2,368 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 24,870 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.
வணிக உற்பத்தித் துவக்கம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேபிடா லாண்ட் தொழிற்பூங்காவில் காற்றாலை விசிறிகள் தயாரிப்பு, க்ளோவிஸ் ஹூண்டாய் நிறுவனத்தின் வாகன உதிரிப் பாகங்கள், ஸ்ரீபெரும்புதூரில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சோஜிட்ஸ் மதா்சன் நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் துணி உற்பத்தித் திட்டம், திருவள்ளூரில் உயவு எண்ணெய் உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாடாடீ நிறுவனத்தின் கிடங்கு அமைப்புத் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஹிப்ரோ ஹெல்த்கோ் நிறுவனத்தின் மருந்து, மருத்துவப் பொருள்கள் உற்பத்தித் திட்டம், செங்கல்பட்டு சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
மேலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மோதி ஸ்பின்னா்ஸ், லக்கி யாா்ன் டெக்ஸ் நிறுவனத்தின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தித் திட்டங்கள், திருவள்ளூா் மாவட்டத்தில் மகேந்திரா ஸ்டீல் நிறுவனத்தின் எஃகு பாகங்கள் உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டீமேஜ் பில்டா்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பொருள்கள் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் முதல்வா் தொடக்கி வைத்தாா்.
மொத்தமாக 11 திட்டங்களின் மூலமாக தமிழகத்துக்கு ரூ.3,185 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு சுமாா் 6 ஆயிரத்து 955 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நீரஜ் மித்தல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.