தஞ்சாவூரில் தொடர் மழை: அறுவடைக்குத் தயாரான நெற் பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பகோணம் அருகே அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கும்பகோணம் அருகே பழியஞ்சியநல்லூர் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்
கும்பகோணம் அருகே பழியஞ்சியநல்லூர் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பகோணம் அருகே அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை புதன்கிழமை காலை வரை பெய்தது. மேலும், புதன்கிழமை பகலிலும் அவ்வப்போது லேசான தூறல் விழுகிறது. தொடர்ந்து வானில் மேக மூட்டமாக இருக்கிறது. இதனால், மாவட்டத்தில் குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அணைக்கரை 84.8, மஞ்சளாறு 52.4, மதுக்கூர் 47, கும்பகோணம், திருவிடைமருதூர் தலா 36, பாபநாசம் 18.4, அதிராம்பட்டினம் 16.2, அய்யம்பேட்டை 16, தஞ்சாவூர் 15, நெய்வாசல் தென்பாதி 14.8, பட்டுக்கோட்டை, குருங்குளம் தலா 14, பேராவூரணி 12.4, வெட்டிக்காடு 11.8, பூதலூர் 11.4, வல்லம் 11, திருவையாறு 9, திருக்காட்டுப்பள்ளி 8.8, கல்லணை 8.2, ஒரத்தநாடு 6.4, ஈச்சன்விடுதி 2.4. 

மாவட்டத்தில் சராசரியாக 21.19 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதியிலும், வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியிலும் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட பழியஞ்சியநல்லூர், எஸ். புதூர் கிராமங்களில் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கோடைப் பருவ நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதுகுறித்து பழியஞ்சியநல்லூர் விவசாயி அ. செல்வகுருநாதன் தெரிவித்தது:

பழியஞ்சியநல்லூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கோடைப் பருவ நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தோம். ஏக்கருக்கு குறைந்தது ரூ. 20,000 செலவு செய்துள்ளோம். அனைத்து பயிர்களும் அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்தது. சிலர் அண்மையில் அறுவடை செய்துவிட்டனர். பலர் புதன், வியாழக்கிழமைகளில் அறுவடை செய்ய இருந்தோம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இப்பகுதியில் பெய்யும் மழை நீர் வடிந்து செல்ல அ பிரிவு வடிகால் வாய்க்கால் உள்ளது. இதை நூறு நாள் வேலைத் திட்டத்தில் செடி, கொடிகள் மட்டும் அகற்றப்படும். ஆனால், தூர்ந்துபோய் மேடாக உள்ள இந்த வாய்க்காலை முறையாகத் தூர் வாரப்படாததால் நீரோட்டம் பாதிக்கிறது. இதனால், மழை பெய்தால் வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிந்து செல்வதற்கு வாய்ப்பில்லாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் செல்வகுருநாதன்.

மழையில் நனையும் நெல் மணிகள்

இதேபோல, பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதியில் அறுவடை செய்த கோடை பருவ நெல் மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால், கொள்முதல் நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக நெல் குவியல்கள் வெளியே திறந்தவெளியில் கிடக்கின்றன. தொடர் மழையாலும், தூறலாலும் நெல் மணிகள் நனைந்து வருகின்றன.

படவிளக்கம்: கும்பகோணம் அருகே பழியஞ்சியநல்லூர் கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com