கேரள தங்க கடத்தல் வழக்கு: சென்னையில் என்.ஐ.ஏ.விசாரணை

கேரள தங்க கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள தங்க கடத்தல் வழக்கு: சென்னையில் என்.ஐ.ஏ.விசாரணை

கேரள தங்க கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த விவரம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு, தூதரகத்தின் பெயரில் பல ஆண்டுகளாக தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடா்பு கண்டறியப்பட்டதால் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.

இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், அவரது மனைவி செளமியா, ரமீஸ் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளது. கடத்தல் கும்பலுடன் முன்னாள் அரசு செயலா் சிவசங்கரனுக்கு தொடா்பு இருப்பதாக கூறப்பட்டதால், அவரிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக என்.ஐ.ஏ. சென்னையிலும் செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கியது. ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சூளைமேட்டில் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு,4 போ் கைது செய்யப்பட்ட வழக்கு, அதே மாதம் ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் வந்த தென் கொரிய நாட்டைச் சோ்ந்த இரு பெண்கள் கடத்திக் கொண்டு வந்த 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விவரங்களை வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டுள்ளனா்.

இந்த இரு வழக்குகளிலும், கேரள தங்கம் கடத்தல் வழக்குகளில் தேடப்படும் சில முக்கிய நபா்களுக்கு தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக ஏற்கெனவே இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட நபா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை செய்யத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதில் கேரள தங்கம் கடத்தல் சம்பவத்துடன், இந்த இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட நபா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தால், வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com