4,300 நூலகங்கள் திறப்பு எப்போது?: வாசகர்கள் எதிர்பார்ப்பு   

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட மாவட்ட, மைய, கிளை நூலகங்கள் திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து ஏராளமான வாசகர்கள் காத்திருக்கின்றனர்.
நாமக்கல் நூலகம்
நாமக்கல் நூலகம்

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட மாவட்ட, மைய, கிளை நூலகங்கள் திறக்கப்படும் நாளை எதிர்பார்த்து ஏராளமான வாசகர்கள் காத்திருக்கின்றனர்.
 
ஆலயங்களுக்கு நிகரானது கல்விச் சாலைகள். ஆன்மீகத்துக்கும், அறிவுக்கும் தீனி போடும் இந்த இரண்டு இடங்களையும் புனிதமாகவே அனைவரும் கருதுகின்றனர். அன்றாட நிகழ்வுகளையும், அரிய தகவல்களையும், அமைதிப்படுத்தும் நன்னெறி கதைகளையும் தேடிச் சென்று  படிக்க விரும்பும் இடம் நூலகம் மட்டுமே. ரூ.10 செலுத்தினால் நூலகத்தின் அங்கத்தினராகி விரும்பிய புத்தகங்களை எடுத்து சென்று வீட்டில் இருந்தபடி படிக்கும் வாய்ப்பை நூலகங்களே வழங்குகின்றன. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி பத்திரிகைகளும் ஒரே இடத்தில் படித்து பயன்பெறும் வாய்ப்பும் இங்கு தான் கிடைக்கிறது. 
 
தமிழகத்தில் மாவட்ட நூலகங்கள், மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் என 4,300 எண்ணிக்கையில் உள்ளன. இந்த நூலகங்களில் குறைந்த பட்சம் 500 முதல் 5 ஆயிரம் எண்ணிக்கையில் புத்தகங்கள் உள்ளன. விடுமுறை நாள்களை தவிர்த்து மற்ற நாள்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் நூலகப் பதிவேட்டில் கையெழுத்திட்டு தாங்கள் விரும்பும் புத்தகங்களை படித்து மகிழ்வர்.
 
ஒவ்வோர் மாவட்டத்திலும் மாவட்ட தலைமை நூலகங்களில் 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒருவருக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதனைக் கொண்டு நூலகத்திற்கு தேவையான பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்கப்படுகிறது. கரோனா தொற்று பரவலால் மார்ச் 25–இல் மூடப்பட்ட நூலகங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. வாசிப்பு பழக்கம் உடையோர் நூலகம் திறப்பை எதிர்பார்த்து ஒவ்வோர் நாளும் அங்கு வந்து செல்லும் நிலை காணப்படுகிறது. 4 மாதங்களாக மூடியிருப்பதால் வாசகர்கள் பலர் மனக்குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 
ஜூலை 8–ஆம் தேதி கிராமப்புற கோயில்கள் திறக்க அரசு  அனுமதியளித்த நிலையில், நூலகங்களுக்கும் அதுபோன்ற அனுமதி கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கோயில்களை காட்டிலும் நூலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை குறைவு தான். கரோனா பரவல் தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வரும்  வாசகர்களை அனுமதிக்கலாம் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது. பொது முடக்கம் முழுமையாக விலக்கப்படும் வரை நூலகங்கள் திறப்புக்கான தடையை தொடர அரசு விரும்புகிறதா என்ற கேள்வியும் வாசகர்களிடத்திலே உள்ளது.
 
இது குறித்து நாமக்கல் மாவட்ட நூலக அலுவலர் ரவி கூறியதாவது,  “கிராமக் கோயில்கள் திறக்கப்படும்போது நூலகங்கள் திறப்பையும் எதிர்பார்த்தோம். ஆனால் அறிவிப்பு ஏதுமில்லை. தமிழக அளவில் 4,300 நூலகங்களும், நாமக்கல் மாவட்ட அளவில் 147 நூலகங்களும் உள்ளன.

நிறைய பதிப்பாளர்கள் தங்களுடைய புத்தகங்களை நூலகங்கள் வாயிலாகவே வாசகர்கள் பார்வைக்கு கொண்டு செல்வர். கரோனா பொது முடக்கம் காரணமாக அது தடைபட்டுள்ளது. நூலகத்தில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக இணைவோரும், தினசரி பத்திரிகை மற்றும் வார இதழ்களை படிக்க வரும் வாசகர்களும் நூலகங்கள் மூடியிருப்பதால் கவலையடைந்துள்ளனர். தமிழக அரசு விரைவில் நூலகம் திறப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com