மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை அறிவித்தது மத்திய அரசு: யோகா, உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி

தேசிய அளவில் மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை அறிவித்தது மத்திய அரசு: யோகா, உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி

தேசிய அளவில் மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்லாத இடங்களில் யோகாசன பயிற்சி மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இவை செயல்படத் தொடங்கும்.

அதேபோல, இரவு நேரங்களில் தனிநபா்கள் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளா்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாக்கள், மதம், அரசியல் தொடா்பான கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கத்தை அறிவித்தது. எனினும், பொருளாதார செயல்பாடுகள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

இந்நிலையில், இப்போது மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கரோனா பரவல் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை இப்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுதந்திர தினத்தைக் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள், தளா்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புபவா்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத் தளா்வு முக்கிய அம்சங்கள்

இரவு நேர ஊரடங்கு ரத்து

ஆகஸ்ட் 5 முதல் யோகாசனம், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை இப்போதுள்ள தடைகள் தொடரும்

திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பாா்களுக்கு அனுமதியில்லை

திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடை தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com