ரயில் சேவை, சுற்றுலாவுக்கான தடை தொடரும்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் சேவை, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள
ரயில் சேவை, சுற்றுலா உள்ளிட்டவைக்கு தடை தொடரும்
ரயில் சேவை, சுற்றுலா உள்ளிட்டவைக்கு தடை தொடரும்

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் சேவை, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த பொது முடக்கத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

 ஜூலை மாதத்தைப் போலவே, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இன்றி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

• மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.

• அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

• நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.

• தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

• வணிக வளாகங்கள்.

• பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

• மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

• மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

• திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட  அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

• அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

• மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.

மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com