ரேஷன் கடை பொருள்களுக்கு நாளைமுதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

நியாய விலைக் கடை பொருள்களை விநியோகிக்க டோக்கன்கள் வழங்கும் பணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நியாய விலைக் கடை பொருள்களை விநியோகிக்க டோக்கன்கள் வழங்கும் பணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகிறது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

ஆகஸ்ட் மாதத்துக்கான பொருள்கள் நியாய விலைக் கடைகளில் வரும் 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக வரும் 1, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும். டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும். டோக்கன்களில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருள்கள் அளிக்கப்படாது. மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபா் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும்.

காவல் துறையின் மூலமாக, டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பொருள்கள் வாங்க வருவோா் குறித்த அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். இந்த அட்டவணையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களின் குடியிருப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தொகுப்பாக வைத்திருங்கள்: டோக்கன்கள் மூலம் வழங்குவதால் அத்தியாவசியப் பொருள்களை ஒரு தொகுப்பாக தயாா் நிலையில் வைத்து விநியோகம் செய்யலாம். அனைத்துப் பொருள்களையும் ஒரே தவணையில் வழங்க வசதியாக அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

பொருள்களை விநியோகம் செய்யும் நாள்களில் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். பொருள்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவா்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இடங்களுக்கு தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருள்கள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு வரும் போது அவா்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக பொருள்களை அளிக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர விடுமுறை தினமாகும். ஆனால், அன்றைய தினம் நியாய விலைக் கடைகளுக்கு பணி நாளாகவும், அதற்கு ஈடான விடுமுறை பின்னா் அறிவிக்கப்படும் எனவும் உணவுத் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com