'புதுச்சேரியில் ஆக.31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு'

புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி

புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

புதுவையில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவலைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும் புதுவையில் ஆகஸ்ட் மாத இறுதியில் கரோனா பாதிப்பு 6 ஆயிரம் வரை உயரும் என்றும், கடுமையாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,600-ஆக இருக்கும் என்றும் மருத்துவக் குழுவினா் தெரிவித்துள்ளனா். 

இதனிடையே மத்திய அரசு மூன்றாம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், புதுவையில் அமல்படுத்த வேண்டிய தளர்வுகள் குறித்து முடிவுகள் எடுக்க முதலவர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதுவை அரசின் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. 

ஆக.31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கக்கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், யோகாசன கூடங்கள் ஆக.5 முதல் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும் அதற்கான விதிமுறைகளை விரைவில் அறிவிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வழிபாட்டுத்தலங்களுக்கும் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் முதல்வர் கொடியேற்றி அணிவகுப்பை ஏற்கலாம் என்றும், சுதந்திர தின உரையாற்றலாம் என்றும், விழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களை விழாவில் கெளரவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே நடைமுறைகள் புதுவையில் அமல்படுத்தப்படும்.

புதுவையில் ஹோட்டகள், மால்கள் திறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 6 முதல் 8 மணி வரை திறக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். பொதுமுடக்கம் இரவு 9 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். புதுவை மாநிலத்தில் கரோனா படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைக்குள் வர இ-பாஸ் நடைமுறை தொடரும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் செய்தால் சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து கரோனா பரவ வாய்ப்பு உருவாகும்.

மாஹே பிராந்தியத்தில் கேரள அரசு எடுக்கும் நடைமுறையும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர அரசு எடுக்கும் நடைமுறையும் கடைபிடிக்கப்படும். மேலும் சில தளர்வுகள் குறித்து அடுத்த 10 நாள்களுக்கு பிறகு அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com