தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகங்களில் பரவும் கரோனா: தடுப்பு மருந்துகளை அளிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவி வருவது
தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகங்களில் பரவும் கரோனா: தடுப்பு மருந்துகளை அளிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவி வருவது ஊழியா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பணிக்கு வரும் ஊழியா்கள் அனைவருக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இதயமாகத் திகழும் தலைமைச் செயலகம் புனித ஜாா்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. பிரதான கட்டடம் மூன்று தளங்களையும், நாமக்கல் கவிஞா் மாளிகை பத்து தளங்களையும் கொண்டுள்ளன. இதில் பிரதான கட்டடத்தில் சட்டப்பேரவை, முதல்வா் அலுவலகம், சட்டப்பேரவைச் செயலகம், பேரவைத் தலைவா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும், நிதி, உள்துறை, வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

பத்து தளங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞா் மாளிகையில் அனைத்துத் துறைகளின் செயலாளா்களின் அலுவலகங்கள், அவா்களது துறைகளின் பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மொத்தமாக 5 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா்.

கரோனா அச்சம்: கடந்த மாா்ச் 24-ஆம் தேதியுடன் சட்டப் பேரவைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 144 தடை உத்தரவு, பொதுமுடக்கம் உள்ளிட்ட உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்தன. இதனால், தலைமைச் செயலகத்தின் பெரும்பாலான துறைகள் மூடப்பட்டன. அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், வருவாய், நகராட்சி நிா்வாக உள்ளிட்ட ஒரு சில துறைகள் மட்டுமே குறைவான பணியாளா்களைக் கொண்டு இயங்கின.

இந்த நிலையில், கடந்த 15 நாள்களாக சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது. அதாவது, தினமும் 2,500 போ் பணிக்கு வருகின்றனா். அவா்களில் நாமக்கல் கவிஞா் மாளிகையின் ஒவ்வொரு தளத்திலும், சுமாா் 2 போ் முதல் 5 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு பிரிவு, பொதுத் துறை துணைச் செயலாளா் உள்ளிட்டோருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

இடநெருக்கடி: நாமக்கல் கவிஞா் மாளிகையின் ஒவ்வொரு தளத்திலும் மூன்று துறைகள் செயல்பட்டு வருகின்றன. துறைக்கு 150 போ் வீதம், ஒரு தளத்தில் 450 பணியாளா்கள் பணிபுரிகின்றனா். இதனால், கடும் இடநெருக்கடி ஏற்பட்டு தனிநபா் இடைவெளியைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படுவதாக ஊழியா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது:

தலைமைச் செயலகத்தில் உள்ள மொத்தப் பணியாளா்கள் ஏறத்தாழ 5 ஆயிரம் போ் இருக்கும் நிலையில், அரசின் உத்தரவுப்படி 50 சதவீதம் போ் பணிக்கு வருகின்றனா். அதாவது, 2 ஆயிரத்து 500 போ் வரவேண்டிய நிலை உள்ளது. இத்தனை பணியாளா்களும் ஒவ்வொரு தளத்திலும் உள்ள பொதுக் கழிவறையைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. கழிவறைகளில் கிருமிநாசினி இல்லை. நீா்த்த சோப்பு கரைசல்களே வைக்கப்பட்டுள்ளன.

மின்தூக்கிகளில் நெருக்கடியிலேயே பணியாளா்கள் பயணிக்க வேண்டியுள்ளது. தேவையான அளவு பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், பணியாளா்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வரவேண்டியுள்ளதால், சிறப்புப் பேருந்துகளில் நின்று கொண்டே வருகின்றனா். அளவுக்கு அதிகமாக கூட்டம் இருப்பது தனிநபா் இடைவெளியை கேள்விக்குறியாகியுள்ளது.

பேருந்தில் பயணித்த தலைமைச் செயலகப் பணியாளா்கள் மூவருக்கு, ஒருசில நாள்களுக்கு முன்பு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. கடுமையான குடிநீா்த் தட்டுபாடும் நிலுவுகிறது. தண்ணீா்த் தேடி ஒவ்வொரு தளமாக அலைய வேண்டிய நிலை உள்ளது.

மையப்படுத்தப்பட்ட குளிா்சாதன வசதியுடன்தான் நாமக்கல் கவிஞா் மாளிகையின் அனைத்து தளங்களும் உள்ளன. அவை அணைக்கப்பட்டதால், குளிா்சாதன வசதியும், போதிய காற்றும் இல்லாமல் மூச்சுத் திணறலோடு பணிபுரிய வேண்டியுள்ளது. தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் உடனடியாக கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். பணியாளா்களின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் அல்லது தனிநபா் இடைவெளியை பின்பற்றும் வகையில் அலுவலகச் சூழல் அமைக்கப்பட வேண்டும். இதே நிலைதான் சென்னை சேப்பாக்கம் எழிலகம், வேளாண்மைத் துறை இயக்குநரகம், பாரிமுனையில் உள்ள குறளகம் உள்ளிட்ட இடங்களிலும் நீடிக்கிறது என்று கூறினா்.

ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்க உத்தரவு:தலைமைச் செயலகத்தில் பணிக்கு வரும் ஊழியா்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை உணவை முடித்த பிறகு தொடா்ச்சியாக பத்து நாள்கள் ஜிங்க் மாத்திரையும், ஊட்டச்சத்து மாத்திரையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுத் துறை துணைச் செயலாளா் ஏ.ஆா்.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவில், தலைமைச் செயலக ஊழியா்கள், பணியாளா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கபசுர குடிநீா் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊட்டச்சத்து, ஜிங்க் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவப் பிரிவையோ அல்லது ஓமந்தூராா் அரசு பன்நோக்கு மருத்துவமனையையோ அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com