கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? ஐஎம்ஏ பரிந்துரை

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) பரிந்துரை செய்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? ஐஎம்ஏ பரிந்துரை


சென்னை: கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) பரிந்துரை செய்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் முதற்கட்ட பரிசோதனைகள் உட்பட கரோனா குணமாகும் வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசுகள் கட்டண வரைமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை செய்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அதில், கரோனா தொற்று ஏற்பட்டு லேசான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கு (10 நாள்களுக்கு சிகிச்சை அளிக்க) ரூ.2,31,820ஐ கட்டணமாக வசூலிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

அதேப்போல, கரோனா தொற்று ஏற்பட்டு கடும் பாதிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு (17 நாள்களுக்கு) ரூ.4,31,411-ஐ கட்டணமாக வசூலிக்கலாம். நாள் ஒன்றுக்கு எனக் கணக்கிட்டால் ரூ.43 ஆயிரத்தை கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

இந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான ஆலோசனைக் கட்டணம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவக் கழகம் வைத்திருக்கும் பரிந்துரை குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com