பயணிகளை அதிகம் ஏற்றினால் ஒழுங்கு நடவடிக்கை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே அச்சம் 

அரசு பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற அனுமதிக்கும் நடத்துநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அச்சத்தில் உள்ளனர். 
பயணிகளை அதிகம் ஏற்றினால் ஒழுங்கு நடவடிக்கை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே அச்சம் 

அரசு பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற அனுமதிக்கும் நடத்துநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அச்சத்தில் உள்ளனர். 

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளை இயக்க அனுமதி  வழங்கப்பட்டது. 50 சதவீத பேருந்துகள், 60 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது.

கடந்த சில நாள்களாகப்  பேருந்துகளில் ஒரே இருக்கையில் 2, 3 பேர் அமர்வது, நின்றபடி நெரிசலுடன் அதிகம் பேர் பயணிப்பது போன்றவற்றைக் காண முடிகிறது. அதிகாரிகள் வசூல் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும், பயணிகளை அதிகம் ஏற்றுமாறு வாய்மொழியாக உத்தரவிடுவதாகவும் நடத்துநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அதிகம் பயணிகளை ஏற்றிச் சென்ற நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனால் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் 31 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவராகவும், 10 பேர் நின்றபடி பயணம் செய்பவர்களாகவும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் பயணிகளை ஏற்றாததால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் காலை, மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கூடுதல் பேருந்துகளும் இல்லாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகின்றனர்.   

நாமக்கல்–கரூர் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் கூறியது; 

அண்மையில் அதிகப்படியான பயணிகளை ஏற்றியதாக ஆத்தூர் பணிமனைக்கு உட்பட்ட நடத்துநர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்குப் பயந்து தான் பேருந்தில் அதிகாரிகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற்றுவதில்லை. மக்கள் சிரமத்தைப் பார்த்தால் நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்றனர்.

இது குறித்து  நாமக்கல் கோட்ட பணிமனைகளின் மேலாளர் காங்கேயன் கூறியது; ஓட்டுநர், நடத்துநர்களை பணியிடை நீக்கம் செய்யும் அளவிலான நடவடிக்கை ஏதுமில்லை. ஆத்தூர் பணிமனை எனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அங்கு யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுமாறும், பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகம் இருந்தால் செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளோம். 

மேலும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தப் பகுதியில் கண்காணிப்பாளர் ஒருவரை நிற்க வைத்துள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், கூட்டத்தைக் கருத்தில் கொண்டு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்துகளை இயக்குகிறோம். காலை, மாலை வேளைகளில் மட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com