10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்தாம்  வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை:  பத்தாம்  வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவத்சலம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு  ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 

இந்த பொதுத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான பணிகளில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், 2 லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு பொதுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு சிறப்பு வழக்குரைஞர் சி.முனுசாமி, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.  மனுதாரர் தரப்பில் ஆஜரான  வழக்குரைஞர் இளங்கோ, கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த தேர்வு நடந்தால் மாணவர்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய தேர்வு இரண்டு மாதம் காலதாமதமாக நடைபெற உள்ளது. இனிமேலும் தேர்வை ஒத்திவைக்க முடியுமா என கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில், தேர்வை எழுத மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. தற்போது தேர்வை நடத்தினால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த பொதுத் தேர்வை எழுத வரும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் என்று தெரிவித்தார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் வரும்  11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார். 

அப்போது நீதிபதிகள், பொதுத் தேர்வை எழுத வரும் மாணவர்களின் பிரச்னைகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும். பொதுத் தேர்வை ஏன் ஒத்திவைக்கக்கூடாது, மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடக்கூடாது. தமிழக அரசு பொதுத் தேர்வை நடத்த இத்தனை அவசரம் காட்டுவது ஏன், கரோனா நோய்த்தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகமாகி கொண்டே போகிறது. மேலும் இந்த பொதுத் தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள 2 லட்சம் ஆசிரியர்கள் தேவையற்ற சிரமத்துக்கு ஆளாகக் கூடாது. 

எனவே பொதுத் தேர்வை ஜூலை மாதம் நடத்தலாமே என கேள்வி எழுப்பினர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அந்த உத்தரவை மீறி செயல்படுமா,  இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே   பொதுத் தேர்வை ஒத்திவைக்க முடியுமா என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் தேர்வு மையங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும்  11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com