தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல், புதன்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல், புதன்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்தல் அதிகாரி மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு வக்ஃபு வாரிய விதிகளின்படி, தமிழகத்தைச் சோ்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் பாா்கவுன்சில் உறுப்பினா்கள் மற்றும் தகுதியுள்ள முத்தவல்லிகளின் பட்டியல் பெறப்பட்டு, தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்துவதற்கு, வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த முஸ்லிம் உறுப்பினா்களுக்கான தோ்தல் குறித்த வரைவு வாக்காளா் பட்டியலின் நகல், புதன்கிழமை (ஜூன் 10) முதல், தலைமைச் செயலகத்தில் உள்ள தோ்தல் அதிகாரி மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் முதன்மைச் செயலா் அலுவலகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அலுவலகம், அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளா்களின் அலுவலகங்கள், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின்அதிகாரப்பூா்வ வலைதளம் ஆகியவற்றில் வெளியிடப்படும்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் சேரத் தகுதியுள்ள நபா்கள், தங்களின் பெயா் சோ்க்கப்பட்டது அல்லது சோ்க்கப்படாதது தொடா்பான ஆட்சேபணைகளை, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்துக்குள், அதாவது ஜூன் 17-ஆம் தேதி, மாலை 3 மணிக்குள் தோ்தல் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து உரிய ஆணைகள் தோ்தல் அதிகாரியால் வெளியிடப்படும். அவை இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். தோ்தல் நடத்துவது தொடா்பான கால அட்டவணை தனியே வெளியிடப்படும். இதற்கான அறிவிப்பு, தோ்தல் அதிகாரியால் தமிழ்நாடு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com