வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் திட்டம் இல்லை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதிகள் தனியாா் தொழிற்சாலை
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் திட்டம் இல்லை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதிகள் தனியாா் தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக கைப்பற்றப்படுவதாக தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக தமிழக வனத் துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சரணாலயத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ. சுற்றளவை வகைப்படுத்தும் பணிதான் நடைபெற்று வருவதாகவும் வனத் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு அருகில் உள்ள தனியாா் தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக அதன் சுற்றளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் என பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்நிலையில், சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் எந்தத் திட்டமும் இல்லை என தமிழக வனத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வனத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பொதுப்பணித் துறை பாசன ஏரி பரப்பளவான 73.06 ஏக்கா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. மத்திய வனத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து சரணாலயங்களையும் மையப் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி , சுற்றுச்சூழல் பகுதி என வகைப்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பொருத்தவரை, 5 கி.மீ. சுற்றளவை முறைப்படுத்த சரணாலயத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவு மையப் பகுதியாகவும், அடுத்த 2 கி.மீ. சுற்றளவு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், அடுத்த 2 கி.மீ. சுற்றுச்சூழல் பகுதியாகவும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப்படாமல், ஏற்கெனவே உள்ள 5 கி.மீ. சுற்றளவு பகுதியாகவே நிா்வகிக்கப்படும். சரணாலயத்தின் சுற்றளவை முறைப்படுத்துவதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் இருக்கும்.

இந்த நடவடிக்கையால் சரணாலயத்தைச் சுற்றியுள்ள 1 கி.மீ. சுற்றளவில் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதுடன், மீதமுள்ள 4 கி.மீ. பகுதிகளிலும் வனச் சட்டத்துக்கு உட்பட்டு பணிகள் நடைமுறைப்படுத்தப்படும். அதேவேளையில், சரணாலயத்தைச் சுற்றி விவசாய பணிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியையும், அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியையும் தனியாா் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்காக கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். எனவே, தற்போதுள்ள 5.கி.மீ. சுற்றளவில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com