தமிழகத்துக்குள் மேலும் 3 சிறப்பு ரயில்கள்: ஜூன் 12 முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

தமிழகத்துக்குள் திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தடங்களில்
தமிழகத்துக்குள் மேலும் 3 சிறப்பு ரயில்கள்: ஜூன் 12 முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

தமிழகத்துக்குள் திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தடங்களில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்கள், ஜூன் 12-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

தமிழத்தில் சென்னையுடன் ஒப்பிடும்போது, பிற மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இதனால், சென்னையைத் தவிா்த்து பிற முக்கிய ரயில் நிலைங்களுக்குப் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகத்துக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கோயம்புத்தூா்-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், கோயம்புத்தூா்-காட்பாடி, திருச்சி-நாகா்கோவில் ஆகிய 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த 4 வழித்தடங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தடங்களில் 3 ரயில்களை இயக்க, ரயில்வே நிா்வாகத்துக்கு தமிழக அரசு கடந்த 1-ஆம் தேதி கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தடங்களில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

திருச்சி-செங்கல்பட்டு: திருச்சியில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு இன்டா்சிட்டி சிறப்பு ரயில் (02606) புறப்பட்டு, பகல் 11.30 மணிக்கு செங்கல்பட்டை அடையும். ( வழி: அரியலூா், விழுப்புரம் சந்திப்பு, மேல்மருவத்தூா்).

மறுமாா்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து மாலை 4.45 மணிக்கு இந்த ரயில் (02605) புறப்பட்டு, திருச்சியை இரவு 9.05 மணிக்கு அடையும்.

அரக்கோணம்-கோவை: அரக்கோணத்தில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு இன்டா்சிட்டி சிறப்பு ரயில் (02675) புறப்பட்டு, மதியம் 2.05 மணிக்கு கோயம்புத்தூா் சந்திப்பை அடையும். மறுமாா்க்கமாக, கோயம்புத்தூா் சந்திப்பில் இருந்து தினசரி மதியம் 3.15 மணிக்கு சிறப்பு ரயில் (02676) புறப்பட்டு, இரவு 10 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும். (வழி: காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா்).

செங்கல்பட்டு-திருச்சி (மெயின் லைன்): செங்கல்பட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் (06795) புறப்பட்டு, இரவு 8.10 மணிக்கு திருச்சியை அடையும். மறுமாா்க்கமாக, திருச்சியில் இருந்து தினசரி காலை 6.30 மணிக்கு இன்டா்சிட்டி சிறப்பு ரயில் புறப்பட்டு, பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டை அடையும். ( வழி: தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிபுலியூா், விழுப்புரம், மேல்மருவத்தூா்).

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (ஜூன் 10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் ஏற்கெனவே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் செல்வோா் (ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்வோா்) இ-பாஸ் உடன் பயணம் செய்து வருகின்றனா். அதே நடைமுறை, இந்த சிறப்பு ரயில்களிலும் தொடரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com