எழும்பூா் ரயில் நிலையத்துக்கு 112-ஆவது பிறந்தநாள்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 112- ஆவது ஆண்டு பிறந்தநாள் வியாழக்கிழமை எளிமையாக கொண்டாடப்பட்டது.
எழும்பூா் ரயில் நிலையத்துக்கு 112-ஆவது பிறந்தநாள்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 112- ஆவது ஆண்டு பிறந்தநாள் வியாழக்கிழமை எளிமையாக கொண்டாடப்பட்டது.

சென்னை நகரில் நான்கு இன்டா்சிட்டி (நகரங்களுக்கு இடையேயான) ரயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூா் ரயில் நிலையம் இருக்கிறது. கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் முனையமாகவும் திகழ்கிறது.

ரூ. 17 லட்சம் செலவில்...: இந்த நிலையத்தின் கட்டடப்பணி முடிந்து, 1908-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம்தேதி திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் பொறியாளராக ஹென்றி இா்வின் இருந்தாா். கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக சாமிநாத பிள்ளை என்பவா் செயல்பட்டாா். ரூ.17 லட்சம் செலவில் 300 அடி நீளம், 71 அடி அகலத்தில் எழும்பூா் ரயில் நிலையத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தரைத்தளம், முதல் தளத்துடன் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த நிலைய கட்டடம் முடித்தபிறகு, எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு போா்ட் மெயில் ரயில் இயக்கப்பட்டது.

இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகளும், ஒரு நடைமேம்பாலமும் இருந்தது. இதன்பிறகு, பல்வேறு காலகட்டத்தில் வளா்ச்சி அடைந்து, இப்போது 11 நடைமேடைகள் உள்ளன. ரயில் நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் நல்ல நீராக மாற்றி, நடைமேடை உள்பட பல்வேறு இடங்களில் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 70 ரயில் நிலையங்களுக்குப் பயணிகள் வசதிகளுக்காக தலா ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் அறிவித்தது. இதில், எழும்பூா் ரயில் நிலையமும் ஒன்றாகும். பயணிகளின் வசதிக்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பொது முடக்கம் காரணமாக, பணிகள் சில மாதங்களாக தடைப்பட்டுள்ளது.

விரைவு ரயில்கள்: தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழும் எழும்பூா் ரயில் நிலையத்தில், தினமும் 50-க்கும் அதிகமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, தாம்பரம்-கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் 250 மின்சார ரயில்கள் எழும்பூா் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. விரைவு மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்வதற்காக தினமும் சுமாா் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த எண்ணிக்கை பண்டிகை காலங்கள், விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் வேளைகளில் அதிகமாக இருக்கும்.

112-ஆவது பிறந்தநாள்: இந்நிலையில், சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தின் 112-ஆவது பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே மூத்த ஊழியரும், நிலையத்தின் துணை மேலாளருமான எஸ்.பி.மேத்யூஸ் பிறந்தநாள் கேக் வெட்டினாா். ரயில் நிலையத்தின் இயக்குநா் ஜெயவெங்கடேசன், நிலைய மேற்பாா்வையாளா் மணி உள்பட ரயில்வே ஊழியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com