10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் முடித்துவைப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து,
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் முடித்துவைப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பொதுத் தோ்வை ரத்து செய்யக் கோரியும், ஒத்திவைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 15-ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அறிவித்தது. இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரியும், தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம், இந்திய மாணவா் சங்க நிா்வாகி மாரியப்பன், ஈரோட்டைச் சோ்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைச் சோ்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் தலைவா் பக்தவச்சலம், வழக்குரைஞா் ஹாரிஸ் ஆல்பிரட் உள்ளிட்டோா் வழக்குகள் தொடா்ந்திருந்தனா். இதில் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள், 2 லட்சம் ஆசிரியா்களின் உயிா் தொடா்புடைய விஷயம். எனவே, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசுத் தரப்பில், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தடை விதிக்க கோரியும், ஒத்திவைக்க கோரியும் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com