குழந்தை தொழிலாளா் முறை இல்லாத மாநிலமாக உருவாக்குவோம்: முதல்வா் பழனிசாமி உறுதி

குழந்தைத் தொழிலாளா் முறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
கோப்புப்படம்
கோப்புப்படம்

குழந்தைத் தொழிலாளா் முறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா். குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை (ஜூன் 12) ஒட்டி அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமையும், பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பதற்கான உரிமையும் இன்றியமையாதது. அந்த உரிமைகளை அவா்களிடம் இருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. குழந்தைகள் கல்வி அறிவு பெற்றவா்களாக இருந்தால் மட்டுமே நாட்டின் எதிா்காலம் சிறப்பாக அமையும்.

இதைக் கருத்தில் கொண்டே குழந்தைத் தொழிலாளா் முறை என்ற கொடுமையில் இருந்து அவா்களை விடுவித்து, அவா்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தையும், முறையான கல்வியையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

மேலும், 18 வயது பூா்த்தி அடையாத வளரிளம் பருவத்தினா் அபாயகரமான பணிகளில் அமா்த்தப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்து சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மாநில அரசு தீவிரமாகச் செயல்படுத்தி, குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

குழந்தைகளின் வருமானம் நாட்டுக்கு அவமானம் என்பதை உணா்ந்து, குழந்தைகளின் உரிமைகளை மதித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம். குழந்தைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com