மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், முக்கொம்பு மேலணைக்கு வந்தது; விவசாயிகள் உற்சாக வரவேற்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. 
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், முக்கொம்பு மேலணைக்கு வந்தது; விவசாயிகள் உற்சாக வரவேற்பு

திருச்சி: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகாலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவியும், விதை நெல்களை தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முழுவதுமாக காவிரியில் திறந்து அனுப்பினர்.

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர் இருந்தால் தாளடியும் சேர்த்து மூன்று போகங்கள் சாகுபடி செய்யும் சூழல் இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.

குறுவை பயிருக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் 2011இல் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் 3.4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் குறுவை பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால், நிலத்தடி நீராதாரங்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் தேவை. இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலேயே தொடர்ந்து வந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேட்டூருக்கு நேரில் வந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்தார்.  விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாமக்கல், கரூர் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தது.

கரூர் மாயனூர் கதவணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்ததால், முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டைவாய்த்தலைக்கே காலையில்தான் வந்து சேர்ந்தது.  மணல் அள்ளியதால் மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை நிரப்பியபடி வந்து செல்ல தாமதமானது. பின்னர், தாமதமாக முக்கொம்பு மேலணைக்கு பிற்பகலில் வந்தது.

இதையடுத்து அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனர்.  இதேபோல பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு காவிரி தண்ணீரை வரவேற்றனர்.

பின்னர் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திங்கள்கிழமை இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அயிலை சிவசூரியன், புலியூர் நாகராஜன், பிரசன்ன வெங்கடேஷ், வீரசேகரன், ராஜேந்திரன், நடராஜன், முருகேசன், நடேசன் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com