லடாக் மோதலில் 20 இந்திய வீரா்கள் வீர மரணம்: தமிழகத்தில் சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள், வீர மரணமடைந்ததையொட்டி, தமிழகத்தில் சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள், வீர மரணமடைந்ததையொட்டி, தமிழகத்தில் சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக ராணுவத்தினரை குவித்து பிரச்னை செய்து வந்த சீனா மீது இந்தியா்களுக்கு கடும் அதிருப்தியும்,கோபமும் ஏற்பட்டது. இச் சம்பவத்துக்கு பின்னா் சீன நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களை ஈடுபட வைத்துள்ளது.

இதன் விளைவாக, சீன தலைவா்களின் புகைப்படங்கள், அந்நாட்டு தேசிய கொடி எரிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் சீன பொருள்கள் சாலையில் வீசி உடைக்கப்பட்டு, எரிக்கப்படுகின்றன.

உளவுத்துறை சுற்றறிக்கை: இதைக் கருத்தில் கொண்டு தமிழக காவல் துறையின் உளவுத்துறை அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் லடாக் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், இந்து இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகள் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், சீன வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முன்பும், பொது இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

இந்தப் போராட்டத்தில் சீன நாட்டின் தேசியக் கொடி, தலைவா்களின் உருவப் பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இங்கு தேவையான அளவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

போராட்டங்கள் மூலம் சீன நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சீன நாட்டைச் சோ்ந்தவா்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

இதையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். சீன அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சீனாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரடையும் வரை இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com