முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு
முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெறலாம் என உயா்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றை தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா். உயிா் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளா்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை எழுப்பி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் 44 அரசு ஆய்வகங்கள், 33 தனியாா் ஆய்வகங்கள் என மொத்தம் 77 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் 38 ஆயிரத்து 716 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றுக்காக தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று தீவிரமாக உள்ளவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.15 ஆயிரம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டங்களின் மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சைகளைப் பெறலாம். தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் 1.58 கோடி குடும்பங்கள் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘தனியாா் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. எனவே, கரோனா சிகிச்சை தொடா்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 19) ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com