நாளை முதல் முழு ஊரடங்கு: சென்னையில் இருந்து வெளியேறும் மக்கள்

ஜூன் 19-ம் தேதி முதல் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், மாவட்டத்தில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
நாளை முதல் முழு ஊரடங்கு: சென்னையில் இருந்து வெளியேறும் மக்கள்


ஜூன் 19-ம் தேதி முதல் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், மாவட்டத்தில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்,சென்னையில் கரோனா முழு வீரியத்தோடு பரவுகிறது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரத்துக்கு குறையாமல் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழகஅரசையும் அச்சம் கொள்ள வைத்தது. இதன் விளைவாக, சென்னை முழுமையாகவும் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்கள் பகுதியாகவும் இம் மாதம் 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாள்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சென்னையில் மீண்டும் 12 நாள்களுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இன்று காலை முதலே சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது.

வந்தாரை வாழ வைத்த சிங்காரச் சென்னையில் இருந்து கிளம்பினால்தான் வாழ முடியும் என்ற நிலைக்கு மக்களை தள்ளியிருக்கிறது கரோனா தொற்று நோய்.  அது கரோனா தொற்றில் இருந்து தப்பிக்கவும் இருக்கலாம், வாழ்வாதாரத்தைத் தேடியும் இருக்கலாம்.

ஏதோ ஒரு பிழைப்பைத் தேடி சென்னைக்கு வந்த ஏராளமான மக்கள், இங்கே சில மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து இனியும் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், தங்களது வீட்டையே காலி செய்து கொண்டு கிளம்புவதையும் பரனூர் சுங்கச்சாவடியில் பார்க்க முடிகிறது.

வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டு ஒரு வாழ்க்கையை அமைத்து சென்னையில் குடியேறிய ஏராளமானோரின் கனவுகள் கரோனாவால் தகர்ந்து போனது. மீண்டும் அதே வாழ்க்கையைத் தேடிக் கொண்டு சொந்த ஊர்களுக்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் மாதம் நாடு முழுவதும் முதல் முறையாக ஊரடங்கு தொடங்கிய காலத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைப்பயணமாகவே சென்று சேர்ந்தனர். இன்று அதே நிலையில் சொந்த மாநில மக்கள் இருக்கிறார்கள். தலையெழுத்தை மாற்றும் என்று நினைத்து சென்னைக்கு வந்த மக்கள், இன்று தலைநகரில் இருந்து தலை தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடு தலையிலும், மனதிலும் கனத்தோடு சென்னையின் எல்லையை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.. வாடகை செலுத்த வழியும் இல்லை என்கிறார்கள், சென்னையில் இருந்து  செல்லும் மக்கள். 

அதே சமயம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி இ-பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com