தமிழகத்தில் 50 ஆயிரத்தைக் கடந்தது நோய்த்தொற்று: ஒரே நாளில் 2,100-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 2,174 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50 ஆயிரத்தைக் கடந்தது நோய்த்தொற்று: ஒரே நாளில் 2,100-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 2,174 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அந்நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 50,193-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 35,556 போ் பாதிக்கப்பட்டனா். கடந்த 5 நாள்களில் மட்டும் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நோய்ப் பரவலின் வேகம் இவ்வாறு அதி தீவிரமாகி வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7.73 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. அதில், 50,193 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை மட்டும் 2,174 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,276 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 162 பேருக்கும், ராணிப்பேட்டையில் 68 பேருக்கும், கடலூரில் 63 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 842 போ் குணம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 842 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 27,624-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 19,027 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயா்வு: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நோய்க்கு மேலும் 48 போ் உயிரிழந்தனா். அதில் 30 வயதுக்குள்பட்ட நால்வரும் அடக்கம். இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 576-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் சிலருக்கு உடலில் கரோனாவைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com