இன்று நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமல்: தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 18) நள்ளிரவிலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி, 144 தடை உத்தரவை மீறினால்

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 18) நள்ளிரவிலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி, 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்,சென்னையில் கரோனா முழு வீரியத்தோடு பரவுகிறது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரத்துக்கு குறையாமல் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழகஅரசையும் அச்சம் கொள்ள வைத்தது. இதன் விளைவாக, சென்னை முழுமையாகவும் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்கள் பகுதியாகவும் இம் மாதம் 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாள்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இந்த பொதுமுடக்கத்தை கடுமையான அமல்படுத்தினால் மட்டுமே சென்னையில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என

கூறப்படுகிறது. இதன் காரணமாக, காவல்துறை உயா் அதிகாரிகள், ஏற்கெனவே அமலில் இருக்கும் 144 தடை உத்தரவை எவ்வித சமரசமும் இன்றி செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனா்.

15 ஆயிரம் போலீஸாா்: இதையொட்டி, சென்னை முழுவதும் 387 இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனை நடத்துகின்றனா். அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் வருபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களது வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்வாா்கள். வழக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓரிரு நாள்களில் மீண்டும் காவல்துறை ஒப்படைக்கும். ஆனால், இந்த முறை பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, பொதுமுடக்கம் முடிவடைந்த பின்னரே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பள்ளி, கல்லூரி மைதானங்களில் நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது. பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்காக சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

காவல்துறை எச்சரிக்கை: முழுமையான பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததும், பெருங்களத்தூா், நசரத்பேட்டை, செங்குன்றம், செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு, உள்ளிட்ட நகரின் 18 நுழைவாயில்களும் மூடப்படும். அதன் பின்னா், பொதுஇடங்களில் எக்காரணம் கொண்டும் 5 பேருக்கு மேல் கூடி நிற்பதற்கு போலீஸாா் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சியுடன் இணைந்து பூட்டி, சீல் வைக்குமாறும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2)ன்படி பிறப்பிக் கப்பட்ட தடைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com