சாலை விரிவாக்க ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடர்பாக ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு வாபஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
சாலை விரிவாக்க ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடர்பாக ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு வாபஸ்


சென்னை:  தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரிய முறைகேட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462.211 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகள் விரிவாக்கத்துக்காக ரூ.1,165 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இதுபோன்ற சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டுதோறும் ஒப்பந்தப்புள்ளி பிறப்பிக்கப்படும். ஆனால் இந்த ஒப்பந்தப்புள்ளி 5 ஆண்டுகளுக்குக் கோரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒப்பந்தப்புள்ளி கோரும் போது ஒரு ஆண்டுக்கு ரூ.100 கோடி மட்டுமே செலவாகும், இந்த முறையில் ரூ.500 கோடி வரை மட்டுமே செலவாகும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியால் ரூ.1,165 கோடி செலவாகும். இதனால் ரூ.800 கோடி வரை அரசுக்கு அதிக செலவாகும். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்த துறையின் அமைச்சரான முதல்வர் தனக்கு வேண்டப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளியை அறிவித்துள்ளனர். 

எனவே இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் கடந்த மே மாதம் 6-ஆம் தேதி புகார் அளித்தேன். ஆனால் இதுதொடர்பாக இதுவரை என்னிடம் விசாரிக்கவில்லை, வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையின் இந்தச் செயல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே எனது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.  

இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் மனுதாரர் கொடுத்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையின் முதல்கட்ட விசாரணை நடத்தி, முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் எதுவும் இல்லை என்பதை முடிவு செய்து புகாரை முடித்துவைத்து விட்டனர் எனவும், இந்த வழக்கை விளம்பரத்துக்காக தொடர்ந்துள்ளதாக வாதிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதியளித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com