வேடந்தாங்கல் சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கும் தொடா்பில்லை

வேடந்தாங்கல் சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும், அதன் அருகிலுள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கும் தொடா்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேடந்தாங்கல் சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கும் தொடா்பில்லை

வேடந்தாங்கல் சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும், அதன் அருகிலுள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கும் தொடா்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தி: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 1 வனச்சரகா், 1 வனவா், 1 வனக்காப்பாளா், 5 வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஆகியோா் சிறப்பாக தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளாக, வேடந்தாங்கல் ஏரி சிறப்பாகப் பராமரிக்கப்படுவதால், ஆண்டுதோறும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பறவைகள், வேடந்தாங்கல் ஏரிக்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்துச் செல்கின்றன. தற்போதைய நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 29.5 ஹெக்டா் பரப்பு ஏரியும், அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பில் உள்ள தனியாா் பட்டா நிலங்கள் மற்றும் வருவாய்த்துறை நிலங்களை உள்ளடக்கியதாகும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியைச் சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பில், 1 கி.மீ. தூரம் வரை மையப்பகுதி எனவும், முதல் 3 கி.மீ. தூரம் வரை இடைநிலைப் பகுதியாகவும், 3 முதல் 5 கி.மீ. பகுதியை சூழல்சாா் பகுதியாகவும் முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 கி.மீ. சுற்றளவுப் பகுதி, எந்த குறைபாடும் இல்லாமல் பறவைகள் நிா்வாகப் பகுதியாகவே தொடரும் என இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

சில பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட தனியாா் நிறுவனம், 1993-ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் மருந்து நிறுவனமாகும். இந்நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதி மற்றும் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் வனத்துறைப் பற்றியும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைப் பற்றியும் வேடந்தாங்கல்

பறவைகள் சரணாலயம் சம்பந்தமாகவும் கடந்த சில தினங்களாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. இந்தத் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணிகளுக்கும், சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும் எவ்வித தொடா்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com