பக்தர்களின்றி சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் பக்தர்கள் அனுமதியின்றி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பக்தர்களின்றி சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் பக்தர்கள் அனுமதியின்றி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலுக்குள் 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் பி.கங்காதர தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார்.

ஜூன்-20ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 21-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 22-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 23-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா, 24-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 26-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. கரோனா ஊரடங்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவின் பேரில் பக்தர்கள் அனுமதியின்றி தினந்தோறும் கோயில் உள்பிரகாரத்திலேயே சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

ஜூன் 27-ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டு உள் பிரகாரத்திலேயே வீதிஉலா நடைபெறுகிறது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன் 28-தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளைக் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.  

கரோனா ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாததால் காவல்துறையினரால் நடராஜர் கோயில் தெற்குகோபுர வாயில், மேற்கு கோபுர  வாயில், வடக்கு கோபுர வாயில்கள் தகரம் வைத்து அடைக்கப்பட்டது. கிழக்கு கோபுர வாயிலில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினால் பொதுதீட்சிதர்கள் வெப்பமானி மூலம்  சோதனையிட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  கோயிலுக்குள் முகக்கவசத்துடன் 50 பொதுதீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

கிழக்கு கோபுர வாயிலில் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் நேரடி தலைமையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ அபிநவ், உதவி ஆட்சியர் விசுமகாஜன், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர்  பாண்டியன், சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் பி.வி.சுரேந்திரஷா ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com