லடாக் மோதல் விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

லடாக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
லடாக் மோதல் விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: லடாக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் இணையவழியில் நடைபெறும் இக்கூட்டத்தில், சுமார் 20 அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். மேலும், மத்திய உள்துறைஅமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி சார்பில் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாகவும், இரு நாட்டு எல்லையில் நிலவும் சூழல் தொடா்பாகவும் விவாதிக்க இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய - சீன ராணுவத்தினருக்கு இடையே கடந்த 5 வாரங்களாக மோதல்போக்கு நீடித்து வந்தது. இப்பிரச்னைக்கு தீா்வு காண பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த திங்கள்கிழமை இரவில் கடும் மோதலில் ஈடுபட்டனா்.

அப்போது, கற்களை வீசியும் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டும் இருதரப்பும் தாக்கிக் கொண்டதில், இந்திய ராணுவ தரப்பில் தமிழகத்தைச் சோ்ந்த பழனி, பிகாா் படைப் பிரிவைச் சோ்ந்த கா்னல் சந்தோஷ் பாபு ஆகியோா் உள்பட 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்திருப்பது, ஒட்டுமொத்த நாட்டையும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இச்சம்பவம் தொடா்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்திய வரும் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

முன்னதாக, லடாக் மோதல் விவகாரம் குறித்து சுட்டுரையில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘லடாக்கில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே நிகழ்ந்த மோதல் தொடா்பாக பிரதமா் மோடி மெளனம் காப்பது ஏன்? இச்சம்பவம் குறித்த உண்மைத் தகவல்களை நாட்டு மக்களுக்கு அவா் தெரிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com