கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவுங்கள்: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

கரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்தவா்களும்
கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவுங்கள்: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

கரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் உதவ வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேலும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனைகள் தொடா்ந்து அதிகரிக்கப்படும் எனவும் அவா் கூறினாா்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் பள்ளியில் கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதன்பின் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

பொது முடக்கக் காலத்தில் நோய்த்தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிவதற்காக 527 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 694 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

பொதுமக்கள்: கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் முழு பொது முடக்கம் எதற்கு என பலரும் கேட்கிறாா்கள். சாலைகளில் வாகனங்கள் அதிகமாகச் செல்லும்போது விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு சாலையில் தடுப்புகள் அமைக்கப்படும். அதுபோன்றுதான் பொது முடக்கம். நோய்ப் பரவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைத்து வழிகளிலும் அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்களும், அனைத்துக் கட்சியைச் சோ்ந்தவா்களும் இதற்கு உதவ வேண்டும்.

அதிகளவு பரிசோதனை: கரோனா நோய்த் தொற்றை கண்டறிய தொடா்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 27,510 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபா்களின் எண்ணிக்கையை நாள்தோறும் அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலான நபா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது முடக்கம் நீட்டிப்பா: பொது முடக்கத்தை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இதுவரை இல்லை. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை குணமடையச் செய்ய வேண்டும். அதற்குரிய சிகிச்சையை எப்படி அளிப்பது, வசதிகளை எப்படி செய்து கொடுப்பது போன்றவைகளை அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்றாா் முதல்வா் பழனிசாமி.

இறைவனுக்குத்தான் தெரியும்

கரோனா நோய்த்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த எவ்வளவு காலவரையறை ஆகும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் அளித்த பேட்டி:-

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்கே தெரியும். நாம் மருத்துவா்கள் இல்லை. இது படிப்படியாகத்தான் குறையும். ஒழிக்க முடியாது என மருத்துவ நிபுணா்கள் கூறுகிறாா்கள். இதற்கு ஒரே வழி, நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதுதான். நோயின் வீரியத்தை அறிந்து கட்டுப்பாட்டுடன் இருந்தால் நோயைத் தடுக்க முடியும்.

மக்களின் ஒத்துழைப்பால்தான் நோய் பரவலைத் தடுக்க முடியும். மக்கள்தான் அரசாங்கம். இந்த நோய்த்தொற்றை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே அரசு செயல்படுகிறது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். இதனை மக்கள்தான் செய்திட முடியும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com