கேரளத்தைப் போன்ற சம்பவம்: நாட்டு வெடிகுண்டு வெடித்து சினைப் பசுவின் வாய் கிழிந்தது

மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சினைப் பசு, தீவனம் என நினைத்து கடித்ததில் நாட்டு வெடி குண்டு வெடித்து அதன் வாய்ப் பகுதி கிழிந்து பெரும் சேதத்துக்குள்ளானது. 
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாய்ப் பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையிலுள்ள சினைப் பசு
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாய்ப் பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையிலுள்ள சினைப் பசு

வேலூர்: மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சினைப் பசு, தீவனம் என நினைத்து கடித்ததில் நாட்டு வெடி குண்டு வெடித்து அதன் வாய்ப் பகுதி கிழிந்து பெரும் சேதத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம், மன்னார்காடு காட்டுப்பகுதியில் கடந்த மாதம் கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சிப் பழத்தில் வைத்து கொடுக்கப்பட்ட நாட்டு வெடி குண்டு வெடித்து அந்த யானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஒரு அதிர்ச்சி கரமான சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் நடந்துள்ளது.

அணைக்கட்டு வட்டம் தோலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கடலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன்(64). விவசாயியான இவருக்கு மனைவி, ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவர் வளர்த்து வரும் 3 மாடுகளில் ஒன்று 9 மாத சினையாக இருந்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் கன்று ஈனும் நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், 3 மாடுகளையும் அருகே வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது தீவனம் என நினைத்து அந்த சினை மாடு அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததில் அது வெடித்து பசுவின் வாய்ப் பகுதி கிழிந்து பெருமளவில் சேதத்துக்குள்ளானது.  இதனால் அந்த பசுவால் தொடர்ந்து தீவினம் உட்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸார், ஒடுகத்தூர் சரக வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து கண்ணையன் அளித்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடி குண்டை அங்கு போட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கண்ணையன் கூறியது: மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது வெயிலுக்கு சற்று தொலைவிலுள்ள மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தேன். வெடி சத்தம் கேட்டு விரைந்து சென்று பார்த்தபோது சினை பசு நாட்டு வெடிகுண்டு வெடித்து அதன் வாய்ப் பகுதி கிழிந்து பெருமளவில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. வாய் முழுமையாக சேதமடைந்து விட்டதால் அதன் உயிரை காப்பாற்றுவது சிரமம் என்பதால் பசுவை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.

வனப்பகுதியையொட்டி உள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. அதனைத் தடுக்க நாட்டு வெடிகுண்டை விளை நிலங்களில் தீவனங்களுக்கு இடையே மறைத்து சென்று விடுகின்றனர். இரவு நேரங்களில் அந்த நாட்டு வெடிகுண்டை கடிக்கும் வனவிலங்குகள் அவை வெடித்து உயிரிழக்கக்கூடும். எதிர்பாராத விதமாக பல சமயங்களில் இதுபோன்று கால்நடைகளும், பொதுமக்களும் நாட்டு வெடிகுண்டு களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாட்டு வெடிகுண்டை பாதுகாப்பின்றி போட்டுச் சென்றவர்கள் மீது வனத்துறையினரும், போலீஸாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com