தினமணி இணையதள செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் திறந்தவெளியில் உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு நகராட்சி தடை

கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் உணவுப் பண்டங்களை விற்க நகராட்சி தடை விதித்துள்ளது. 
நகராட்சி கூட்ட அரங்கத்தில் ஆணையர் ஆர்.லதா
நகராட்சி கூட்ட அரங்கத்தில் ஆணையர் ஆர்.லதா

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் என ஜூன் 20ஆம் தேதி, தினமணி இணையதளத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, திறந்தவெளியில் உணவுப் பண்டங்கள் விற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் நகராட்சி ஆணையர் லதா.

மேலும், இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை வர்த்தகர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை நடத்தினார். நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையர் ஆர்.லதா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் முன்னிலை வகித்தார். மேலாளர் எஸ்.லதா வரவேற்றார். கூட்டத்தில், வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சுவாமிநாதன், மருத்து வணிகர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை, நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொருளாளர் பி.கண்ணன் மற்றும் உணவகங்கள், பேக்கரி, டீ கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், ஆணையர் லதா கூறியது..

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளாலும் கரோனா தொற்று நோய் தடுப்பதற்காக தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை அனைவரும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் யாரும் வெளியில் வரக்கூடாது. வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளி விட்டுத்தான் நிற்க வேண்டும். எந்த உணவுப் பண்டங்களையும் திறந்த வெளியில் விற்கவேக் கூடாது. 

மேலும், தேநீர்க்கடைகளில் விற்கக்கூடிய வடை, பஜ்ஜி, சமோசா, போண்டா உள்ளிட்ட அனைத்து தின்பண்டங்களையும், கண்ணாடிக் குடுவையில், வைத்துத் தான் விற்பனை செய்ய வேண்டும். திறந்த வெளியில் விற்பனை செய்யக் கூடாது. மேலும், டீக்கடைகளில் பயன்படுத்தும் கண்ணாடி கிளாஸ்களை சுடு தண்ணீரில் 2 நிமிடம் போட்டு, சுத்தமாகக் கழுவி அதன் பிறகு தான் மீண்டும் பயன்படுத்த வேண்டும். கூத்தாநல்லூர் நகரத்திற்குள் எந்த இடத்திலும் திறந்த வெளியில் எந்த தின்பண்டங்களையும் விற்கக் கூடாது. மீறிச் செயல்படக்கூடிய எந்தக் கடைகளாக இருந்தாலும் சீல் வைக்கப்பட்டு, பூட்டப்படும். விதிமுறைகளை மீறும் கடைகளுக்குக் கட்டாயம் சீல் வைக்க மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளார். 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குள் கரோனா தொற்று நோய் பரவவிடாமல் தடுப்பதற்கு, நகராட்சியுடன், வர்த்தகர்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். தொடர்ந்து, வர்த்தக சங்கம் சார்பில், ஜூன் 25ஆம் தேதி முதல், அனைத்துக் கடைகளும், காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை மட்டும் திறக்கப்படும் எனவும், வரும் ஜூன் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு கடையடைப்பு செய்யப்படும் எனவும், நகராட்சியுடன் வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க தயாராக இருக்கிறோம் என வர்த்தக சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டத்தில், நகராட்சி ஊழியர்கள் வாசுதேவன், மோகன் மற்றும் அனைத்துக் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com